tamilnadu

img

வங்கிகள் மீதான புகார்கள் அதிகரிப்பு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளின் சேவை குறித்த வாடிக்கையாளர்களின் புகார்கள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ல் ஜூன் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில், 1.63 லட்சம் புகார்கள் வங்கி குறைத் தீர்க்கும் மையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இது முந்தைய ஆண்டை விட, 24.9 சதவிகிதம் அதிகமாகும். இதில் 96 சதவிகித புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இதில் பொதுத்துறை வங்கிகளில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த வங்கி மீது 47,000 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனியார் வங்கிகளில், அதிகபட்சமாக ஹெச்.டி.எப்.சி. வங்கியின் மீது சுமார் 12,000 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டி பேங்க் மீது 1,450 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த புகார்களில், வங்கிகள் அதன் விதிகளின்படி வெளிப்படையாகவும், நியாயமான முறையிலும் நடந்துகொள்ளாமல் இருந்தது குறித்து எழுந்துள்ள புகார்கள் 22.1 சதவீதம். ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள் குறித்த புகார்கள் 15.1 சதவீதம். கிரெடிட் கார்டு குறித்த புகார்கள் 7.7 சதவீதம், நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் குறித்து 5.2 சதவிகிதம் என பதிவாகி உள்ளது.

மேலும், ஓய்வூதியம் குறித்த புகார்கள், முன்கூட்டியே தெரிவிக்காமல் எடுக்கப்படும் சேவைக் கட்டணம் வசூலிப்பது, கடன், டெபாசிட், நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ள முகவர்கள், வாராக் கடன் மீட்பு நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல்களை அளிப்பது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக தலா 5 சதவிகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

;